மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
இரண்டாம் பாகம்
9
அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்
மேய்ச்சல் பசுக்கள் சரிவில் இறங்க முயற்சித்து பள்ளத்தில் விழுந்துவிட நேர்வதுண்டு. அந்த ஜீவன்கள் சரிவின் அருகினில் செல்ல நேர்ந்தால் வேகமாக ஓடிச்சென்று, வெகு ஜாக்கிரதை யுடன் அன்பாய், "ம்புர்ப்பா... ம்புர்ப்பா.. ம்புர்ப்பா' என்று கழுத்தை அணைத்துத் திருப்பி, மேய்ச்சலை மாற்றிக்காட்டி திசைதிருப்பி மென்மை யாக நடந்துகொள்ளும் நற்பண்புடைய வெங்கண்ணா, பாதுகாவலர்களின் முரட்டுத் தாக்குதலில் நிலைகுலைந்து போனான். பசுவைக்கூட அதுவரை அடிக்காத அந்த அந்தண வாலிபனுக்கு வலிமையான சாட்டையடி பெரிய பயத் தைக் கொடுத்தது. மார்பில் கைவைத்துக் கீழே தள்ள, கூரான சிறுசிறு முட்களும் கற்களும் மேனியைக் குத்தி காயப்படுத்தின. உள்ளங்கைகளிலும் கால் மூட்டுகளிலும் முட்கள் ஆழப்புதைந்தது வலியை மிகுதிப்படுத்தின. ரத்தம் வந்தது.
""ம். இப்போதாவது படித்துச்சொல். அதில் என்ன எழுதி இருக்கிறது? சொல்'' என்றான் உறுமலுடன் அந்த பாதுகாவலன். ""ஐயோ... பகவானே! இவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்களே. ஐயா, வலிக் கிறது. அடிக்காதீர்கள். உண்மையாகவே நான் படிப்பறிவில்லாதவன். நம்புங்கள் என்னை.''
""பார்... அவனுக்கு என்ன திமிர். என்ன அழுத்தம். மன்னருக்கு முன்பாகவே பொய் சொல்கிறானே'' என மற்றொருவன் தூண்டிவிட, மிதமான போதையிலிருந்த அந்தக் குறுநில மன்னருக்கு கோபம் அதிகப் பட்டது. வயிற்றிலிருந்த பசி அவனது சினத்தை மேலும் அதிகமாக்கியது. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திராட்சை மற்றும் பல பழங்களிலிருந்து பெறப்பட்ட ரசத்தைப் பக்குவப்படுத்தி புளிக்கச் செய்து தயாரித்த பிரத்யேக மதுவையும், மசாலாக்கள் சேர்த்து எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட மீனையும் மாமிசத்தையும் உண்டு தினவேறியவருக்கு தன்னை ஒருவன் ஏமாற்றுவதாக உணர்ந் ததும்- அதுவும் தனது அதிகாரத் திற்குட்பட்ட இடத்தில் வசிப்பவன் தன்னிடம் பொய் கூறுவதும் இன்னும் கோபத்தை உச்சிக்குக் கொண்டு சொல்ல... ""அவன் தோலை உரித்தெடுங்கள்'' என கூச்சலிட்டார்.
சாட்டையடி வேகவேகமாக விசையுடன் வெங்கண்ணாவின்மீது இறங்கி சதையைப் பிய்த்தெடுக்க, உச்சவலியில் துடிதுடிக்கத் தொடங் கினான். நினைவு தப்பத் தொடங்க... அப்போது அவனது ஞாபகத்தில் குரு ராகவேந்திரர் மலர்ந்தார்.
"மறந்தேனே குருவே உம்மை.
என்னை மன்னித்துக் காப்பாற் றுங்கள். குருவே காப்பாற்றுங்கள். ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ... ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ...' என தலைமீது கைகூப்பி வணங் கினான். அதை அவர்கள் அபயம் என்பதாக நினைத்துக்கொண்டு அவனைத் தூக்கி நிறுத்தினார்கள். அந்த ஓலை அவன் கரத்தில் பலவந்தமாகத் திணிக்கப்பட, அதை அவன் மெல்லப் பிரித்து கை விரல்கள் நடுங்கப் பார்வை யிட்டான். வரிவரியாய் மணிமணி யாய் எழுதியிருந்தது. தனது கண்களை மெல்ல அதன்மீது படரவிட, நெஞ்சினுள் ஸ்ரீராக வேந்திரர் புன்னகையுடன் பிரசன்ன மானார். என்னே ஆச்சரியம். மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டிப் படிக்கலானான். உச்சரிப்பால் எழுத்துக்களை சத்தமாகப் புரட்டிப் போட்டான். மெல்லமெல்ல வாசிக்கும் திறன் அவன் வசப்பட்டது.
""என் தாய்க்கு இணையான எனது சுல்தானை வணங்கி எழுது கிறேன். தங்களது தளபதியான முகம் மதுவின் பணிவான வணக்கங்கள். தங்களது ஆணைப்படி படை யெடுத்துச் சென்றபடிக்கு நமது எதிரி நாட்டை வெற்றி கொண்டுவிட்டோம். அதுமட்டு மல்ல; போரின் விளைவாக அருகருகே இருந்த கோட்டைகளும் தங்களின் ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வசப்பட்டுவிட்டன. தோல்வியே அறியாத தங்களுக்கு அல்லா பல வெற்றிகளை அளித்துள்ளார். மன்னர் அவர்களுக்கு மற்றுமொரு மகிழ்வான செய்தி. நமது மகாராணியாருக்கு ஆண்மகவு பிறந்துள்ளது. தங்களுக்கு வாரிசு பிறந்த செய்தியினை தங்களின் தாயாரே தங்களிடம் சீக்கிரம் கூறச் சொன்னார்கள். அல்லா தங்களை தினம்தினம் ஆசிர்வதிப்பதாகக் கூறச் சொன்னார்கள். வாழ்க மன்னர்! வளர்க நமது தேசம். தொடரட்டும் தங்கள் வெற்றி.''
மிகத் தெள்ளத்தெளிவாக வெற்றிச் செய்தியினை நிதானமாக வாசித் ததைக் கேட்டு சந்தோஷமடைந்தார். அதுமட்டுமல்லாமல் வெகுநாட்கள் குழந்தையின்றி இருந்த மன்னருக்கு வாரிசு மலர்ந்த செய்தி இன்னும் மகிழ்வைக் கொடுத்தது. சட்டென்று மனமிரங்கினார்.
""இவ்வளவு தெளிவாகப் படிக்கிறாய். தள்ளிப்போய்க் கொண்டேயிருந்த வெற்றிச் செய்தி யையும் வாரிசு வந்த செய்தியையும் உன்மூலம் கேட்க வைத்ததுகூட அல்லாவின் கட்டளை என்றே கருதுகிறேன். சரி... படிக்கத் தெரியாது என ஏன் பாசாங்கு செய்தாய்?''
""இப்போதும் சொல்கிறேன் மன்னா. எனக்குப் படிப்பறிவில்லை.''
""அப்படியென்றால் இது எப்படி...''
""நான் மனதார வணங்கிய சுவாமி ராக வேந்திரர்தான் இந்த அதிசயத்தை அரங் கேற்றினார்.''
""பார், நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். மறுபடி கோபப்பட்டு முடிவெடுக்க விடாதே அந்தணனே. சரி போகட்டும். இதுபற்றி அப்புறம் பேசுவோம். உனக்கு நான் ஏதேனும் பெரியதாகச் செய்யவேண்டும். உன்னை அடித்ததற்குப் பரிகாரமாகவும், சந்தோஷ செய்திக்கான பரிசாகவும் இருக்கட்டும். நீ பெரிய அறிவாளியாகத் தெரிகின்றாய். ம்? என்ன செய்வது... ம்... ஆம். இனி நீர் எனது ஆலோ சனைக்குத் தகுதியான- எனது சமஸ் தானத்திற்கு திவானாக நியமிக்கிறேன். இன்றிலிருந்து என்னாலும் மரியாதை யாக அழைக்கப்படுவீர். திவான்ஜீ! அடேய்...
நமது திவான்ஜீக்கு காயத்திற்கு ராஜவைத்தியம் செய்து உரிய மரியாதையுடன் கோட்டைக்கு அழைத்து வாருங்கள். நன்கு ஓய்வெடுத்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து வாருங்கள் திவான் அவர்களே.
அடேய்... இருவர் அவருக்குத் துணையாய் இருங்கள். மற்றவர்கள் என்னோடு வரலாம்'' என்றபடி கையசைத்து குதூகலத்துடன் விடைபெற்றார்.
வெங்கண்ணருக்கு கண்ணீர் வந்தது.
அதில் சந்தோஷம் ததும்பியது. தனக்கேற் பட்ட அந்த அதிசயத்தினால் வலிகூட மறந்தே போனது. "எந்தன் தெய்வமே! என் குருவே! ஒருசில நிமிடங்களில் எனது வாழ்க்கை யினைப் புரட்டிப்போட்டு எங்கோ என்னை உச்சியில் வைத்துவிட்டீரே. அதிகார மாய் என்னை கைகாட்டியவர்களை எல்லாம் இனி என்முன் கைகட்டி நிற்கச் செய்துவிட்டீர்களே. உளமார்ந்த நம்பிக்கை யில் உம்மீது பக்திசெய்து சரணடைந் தவர்களை உயரே உயரே என்று கொண்டு சென்றுவிட்ட தாயுள்ளம் கொண்டவரே! என் தாயை எனக்கு நினைவில்லை. இந்த அநாதைக்கு இனி நீங்களே தாய்!'
அந்த அத்துவான பூமியில் கைகுவித்து கண்ணீர்விட்டுத் தொழுகின்ற வெங்கண் ணாவை விநோதமாகவும் மரியாதை யாகவும் தள்ளிநின்று மெய்க்காப் பாளர்கள் பார்த்துக்கொண்டு நின்றிருந் தனர்.
வெற்றி- தோல்வி என்பது இருவித மனோபாவங்களால் ஒப்புக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெற்றி பெற்றவன் மேன்மேலும் பகை மையை வளர்க்கிறான். தோல்வியுற்றவன் வலியுடன் நகர்கிறான். மாறாக வெற்றி- தோல்வியை சரிசமமாய் பாவிக்கிறவன் எவ்வித சலனமுமில்லாது சந்துஷ்டியோடு இருப்பது மிக அற்புதமான ஒன்று. அவன் ஞானத்தின் நிழலினை அணுகுகிறான்.
அதுவே அவன் பண்பட்டவன் என்பதற் கான அறிகுறி. இங்கு வெற்றிப் பெருமி தத்தில் சுல்தானின் ஆக்ரோஷம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஸ்ரீராகவேந்திரரின் அற்புதத்தையும் அருளையும் நேரடியாகப் பெற்ற வெங்கண்ணாவுக்கு வெற்றி- தோல்வி, சந்தோஷம்- துக்கம் என்ற பாகுபாடற்ற நிலைக்கு மனம் பக்குவப்பட்டுவிட்டது. தானும் ஸ்ரீராகவேந்திரரின் சரித்திரத்தில் வெகு முக்கிய பங்கினை மேற்கொள்ளப் போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. நேரடியான அருளைப்பெற்ற வெங்கண்ணாவினது பக்தி பவித்திரமாய், ஆழமானதாய், இருந்தது. ஒரு நிமிடம்கூட இடைவிடாது ஸ்ரீராயரின் நாமத் தையே ஆழ்ந்து மனதுள் உச்சரித்துக் கொண்டேயிருந்தார்.
பிரதிபலனைப் பாராதது பக்தி. ஆண்டவனின் அண்மையில் கிடைக்கும் மென்மையான அருளே மேன்மையானது. அவனது நாமஸ்மரணையே அதிசயங்கள் சிருஷ்டிக்கக்கூடியது. வெங்கண்ணாவுக்கு பதவி, அதிகாரம் வந்தபிறகும் பவ்யம் குறையாது, தனக்கான மாளிகையில் பூஜையறையில் தன்னால் மனதுள் வணங்கிய ராகவேந்திரரை ரூபமாய் வடித்து தினசரி தொழலானார். பேச்சும் மூச்சும் செயலும் சுவாசமும் என சகலமும் "ராகவேந் திரா... ராகவேந்திரா...' என்றாகிவிட இன்னும் பக்குவமாய்க் கனிந்தார். பக்தி முதிரமுதிர கனிவு கூடியது. தான் முன்பு தினசரி வணங்கும் ஸ்ரீஅனுமனின் ராம பக்திக்கு இணையாக ராயர் பக்தியினைப் பேணலானார்.
பிரகலாதனைப் போன்றோ அனுமனைப் போன்றோ உன்னத நிலையை யாரும் அடையவிலலை என்பது கண்கூடு. அதிலும் ஆஞ்ச னேயரின் ராமப் பிரியம் வெகுபிர சித்தம். இராவண வதம் முடிந்து அயோத்தி திரும்பிய பட்டாபி ராமனை அனுதினமும் பிரியாது தொடர்ந்தார் ஆஞ்சனேயர். சபா மண்டபத்தில் கவரி வீசுவது, உண்ணும் போதும், உலா வின் போதும், ஆலோசனையின் போதும் உறங் கும்போதும், ஸ்நானம் செய்யும் போதும், சயனத் திற்கு ஆயத்தமா கையில் அவர் பாதம் பிடித்தும் என ஒரு நிமிடமும் அவரைவிட்டு அகலாது அனுமன்செய்த சேவை சீதாபிராட்டிக்கே இடையூறாக இருந்தது. அண்ணனுக்குச் செய்யும் சேவையில் யாருக்கும் பங்களிக்க விரும்பாத இளவல் லட்சுமணனுக்கும் சினம் வந்தது.
பதினான்கு வருடம் பிரிந்திருந்த அண்ணனுக்கு ஒரு சேவையும் செய்யாத பரத, சத்ருக்கனனுக்கும் அனுமன் இடையூறாய் இருப்பதாகத் தோன்றியது. அஞ்சனை மைந்தனை அங்கிருந்து அகற்ற கூடி ஆலோசித்தனர். காலை ஆரம்பித்து இரவுமுடிய ராமபிரானுக்குச் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் துளி பிசகாது யோசித்து யோசித்துப் பட்டியலிட்டு பணிகளைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். பின்னர் அமைதியா யிருந்த அனுமனை அழைத்த பிராட்டியார், ""பாரப்பா, அருமை மைந்தா ஆஞ்சனேயா! பல வருடம் எனது கணவரைப் பிரிந் திருந்தேன். நீ அணுக்கத் தொண்டனாய் இருந்தாய். ஆனால் இப்போதும் நான் அவருக்கு சேவை செய்ய இயலாத படிக்குத் தொண்ட னாய் இருக்கிறாய். நீயும் ஓய்வு உறக்க மின்றி கடமை யாற்றுகிறாய். இன்றிலிருந்து பரத, லட்சுமண, சத்ருக்ன சகோ தரர்களும் பணியினை என்னோடு சேர்ந்து பகிர்ந்து கொண்டனர். சற்றே விலகியிரும் பிள்ளாய்'' என்றாள்.
""உத்தரவு தாயே. தங்கள் பேச்சிற்கு மறுபேச்சு உண்டா அம்மா. இருப்பினும்...'' என அனுமன் தயங்க- ""இருப்பினும் என்ன அனுமா? ஏதேனும் அனுமானமா?''
""இல்லை தாயே. பணிகளின் பட்டியலை நான் பார்வையிடலாமா?''
""ஏன்... ஏன்... நாங்கள் நுனிக்கு நுனி பார்த்தே பட்டிலிட்டிருக்கிறோம். எனது நாயகருக்குத் திலகமிடுவது முதற்கொண்டு ஒன்றுவிடாது யோசித்திருக்கிறோம்.''
""ஏதேனும் விடுபட்டிருந்தால் அதை நான் சிரமேற்கொள்ளலாமல்லவா அம்மா.''
""ம்... சரி. பட்டியலைத் தாருங்கள்
அனுமனிடம்'' என்றாள் பிராட்டி. சத்ருக்னன்
நீட்டிய பட்டியலை பவ்யமாகப் பெற்றுக் கண்ணுற்ற அனுமன், ""நன்று... நன்று...'' என்று குதூகலித்தார். ""நான் ஐயனை தரிசித்துவருகிறேன்'' என்று கிளம் பினார்.
இனி அனுமனால் தொல்லையில்லை என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சிறு மாற்றம். ஸ்ரீராமச் சந்திர மூர்த்திக்கு ஒரு மெய்க்காப் பாளனாய் பவ்யமாய்த் தொடர்ந்து கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் பிராட்டியாரின் பொறுமை உடைந்தது. ராம சகோதரர்களின் சினமும் எல்லை மீறியது. ""ஆஞ்சனேயே! நீ வாக்குத் தவறுவாய் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. உன் நேர்மை இவ்வளவுதானோ?'' என்று பிராட்டி யார் கேட்க, அனுமன் பதட்டமானார்.
""அம்மா... நான் சத்தியத்திற்கும் தர்மத் திற்கும் கட்டுப்பட்டவன். தெய்வங் களிடம் பொய்யுரைப்பேனா அம்மா?''
""உனக்கான பணி ஏதும் மிச்சமில்லாது பார்த்துப் பார்த்து நாங்கள் பிரித் தெடுத்தும், எங்கள் சேவையில் உனது குறுக்கீடு இன்னும் பெரிதாகவே அல்லவா இருக்கிறது?''
""என்னை மன்னிக்க வேண்டும் அம்மா.
பட்டியலில் விடுபட்டதைச் செய்வதற்காகத் தான் நான் ப்ரபுவின் அணுக்கனாக இருக் கிறேன்.''
""என்னது? என்ன விடுபட்டது? ஏதுமில்லையே'' என்றாள் பிராட்டியார் கேள்விக்குறியோடு.
""உண்டு தாயே.''
""என்ன அது?''
""எனது ப்ரபுவிற்கு அலுப்பிலோ, உறக்கத்திற்கு முன்போ கொட்டாவி வருமல்லவா. அப்போது சொடக்குப் போடவேண்டிய பணி விடுபட்டிருந்தது. எனவே...''
அனைவரும் வாயடைத்துப்போயினர்.
""இருப்பினும் அதற்காக அவரை எப்போதும் ஏன் பின்தொடர்கிறாய்?'' என்றாள் தேவி.
""கொட்டாவி என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்காகத் தான் அம்மா'' என்று பணிவுடன் கண்கலங் கினார்; கைகூப்பினார்.
அனுமனின் புத்திக்கூர்மையையும், அதிலும் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின்மீது அனுமன் கொண்ட அபார பக்தியின் மேன்மையையும் விளக்க ஸ்ரீராமரே மௌன சாட்சியாய் இருந்து ரசித்த இந்த நிகழ்வை என்னவென்று சிலாகிப்பது!
தானும் அனுமன் போன்ற பக்தியை ஸ்ரீராகவேந்திரர்மீது வைத்திருக்கிறோம் என்ற மனநிறைவில், நம்பிக்கையில் திவான் வெங்கண்ணர் சமஸ்தானத்தைப் பரிபாலனம் செய்துவந்தார். ஸ்ரீராகவேந் திரரை மறுபடி சந்திக்கும் அந்த உன்னத நேரம் சிறிது காலத்தில் தனக்கேற்படப் போகிறது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை.
துவேஷமும் பொறாமையும் பிறப்பால் வருவதில்லை. அவனவன் சார்ந்த சமூகம்- அவன் மதம்- அதனால் ஏற்பட்ட ஆழ்ந்த நம்பிக்கை... இந்த சூழ்நிலையில் வளர்த் தெடுக்கப்படுகிறான். எந்தவொரு இறையருளையும் அதிசயத்தையும் தன்னுள் உணர்ந்தாலன்றி சட்டென்று எவரும் நம்பி விடுவதில்லை. மனது ஏற்க வில்லையெனில் அவர்களைப் பற்றிப் புறம் கூறவும், பழிகூறவும் தயங்குவதேயில்லை.
பீஜப்பூர் சுல்தானின் வாரிசையும், மாம்பழ ரசத்தில் மூழ்கி மாய்ந்த தேசாயின் மகனையும் ஸ்ரீராகவேந்திரர் உயிர்ப்பித்தது இவர்கள் நடுவே கேலியாகப் பேசப்பட்டது.
""மயக்கமாக இருந்திருப்பான். முகத்தில் நீர் தெளித்தவுடன் நினைவு வந்திருக்கும். இதைப்போய் "ஆஹா... ஓஹோ... அதிசயம்!' என்றெல்லாம் முட்டாள் ஜனங்கள் கொண்டாடுகிறார்கள்'' என்றான் ஒருவன்.
""சரி. அப்படியே இருக்கட்டும். சமாதியில் புதைத்த ஒருவனை எப்படி உயிர்ப்பிக்க முடியும்?'' என்றான் அவனது சகா.
""நீ அங்கு சென்று பார்த்தாயா. பிரேதத் தைத் தோண்டியெடுக்கும்போது நீ எதிரில் இருந்தாயா?'' என்றான் அந்த மூர்க்கன்.
""இல்லை. ஆனால் எனது நண்பன் பார்த்த தாகக் கூறினானே.''
""அது உண்மையென்று தெரியுமா? ஒருசிலருக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தனது பேச்சு தனித்து எடுபட வேண்டு மென்ற நப்பாசையில், இதுபோன்ற பொய்யை நேரில் கண்டதாகக்கூறி தன்னை சாட்சியாக் கிக்கொண்டு தற்பெருமை கொள்வதும், மிகைப்படுத்துவதும் சுபாவமாகும். அந்த மாத்வ சந்நியாசி இதுபோன்ற நபர்களால் தான் பிரபலமாகிறார். செத்துப்போனவர்களைப் பிழைக்க வைப்பதாவது... நம்பக் கூடிய விஷயமா?''
""அதற்கேன் இப்படி அலட்டிக்கொள் கிறாய். இதனால் உனக்கென்ன வந்தது?''
""நீ தெரிந்துதான் பேசுகிறாயா முட்டாளே. போகின்ற இடங்களிலெல்லாம் சைவர்களையெல்லாம் தனது மாத்வ மதத்திற்கு மாற்றிவிடுகிறாராம். எதிர்ப்பு வாதங்களையெல்லாம் முறியடித்து விடு கிறாராம். அதனால்.''
""நீ வாதம் செய்யப்போகிறாயா? அப்படி ஒன்றும் நீ படித்தவனல்லவே. வீண் ஜம்பம் எதற்கு?''
""இல்லை. இப்படியே இதை விட்டுவிட முடியாது. எனக்கு மேதமை போதாது. நன்கு படித்தவனுமல்ல. ஆனால் அவர் முகத்திரை கிழிக்க ஒரு திட்டமுண்டு. நீயும் ஒத்துழைப்பதாயிருந்தால்...'' ""என்ன திட்டம் சொல்?''
""இதோ இவன் என் அண்ணன் மகன். இவனை மூச்சடக்கி இந்த பாதையோரம் கண் மூடிக் கிடத்தி வைப்போம். அவன் இறந்து விட்டதாய் அந்த மாத்வ சந்நியாசியிடம் நாடக மாடுவோம். சுற்றியுள்ளோருக்கும் இதை முன்பே சொல்லி வைப்போம். அந்த மாத்வ சந்நியாசியை நிராகரிப்பவர்கள் அனைவருமே இங்கு கூடியிருப்பதும் நமது பலம்.
இன்று இந்த வழியில் சஞ்சாரம் வரப் போவதாய் முன்கூட்டியே தகவல் வந்து விட்டது. அதேசமயம் நமது கதறல் துளிக்கூட சந்தேகம் வராதபடிக்கு அமையவேண்டும் என்பதே முக்கியம்.''
""ஆமாமாம்... இதில் அவரது வேஷம் வெளிப்பட்டுவிடும்'' என்று அனைவரும் கூற... அவன் தன் அண்ணன் மகனிடம், ""சிறிது நேரம் நான் கூறும்வரை கண்மூடிப் படுத்திரு. ஏற்கெனவே மூச்சுடக்கும் பயிற்சி உனக்கு அத்துப்படி. நான் சொல்லும்வரை நீ தாக்குப் பிடி. என்ன தயாரா'' என்றான்.
""சரி... சித்தப்பா'' என்றான் அப்பிராணி யாய். அந்த சிறுவன் அந்த நிகழ்வில் தன்னை பிரதானப்படுத்தியதில் வெகு ஆர்வமாய் ஒப்புக்கொண்டு கண்மூடி சாலையோரம் படுத்தான். தூரத்தே ஸ்வாமி ஸ்ரீராக வேந்திரர் ஒரு சுடர் போன்று நடந்துவந்து கொண்டிருந்தார்.
(தொடரும்)